இப்படிக்கு இவர்கள்: வரலாற்றை மறைத்ததே காரணம்!

இப்படிக்கு இவர்கள்: வரலாற்றை மறைத்ததே காரணம்!
Updated on
2 min read

வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சரியான முறையில் கொண்டுசெல்லாமல் போனதும், அப்படிக் கொண்டுசென்ற வரலாற்றையும் தங்களது வசதிக்கு ஏற்ப திரித்துக் கூறியதாலும்தான் காவி அதிகாரத்தின் நிறமானது என்று கருதுகிறேன். (‘காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?’, ஜூன்.22) விடுதலைப் போராட்டத்தில் சங்பரிவார் பங்கேற்கவில்லை என்பதோடு மட்டுமல்ல; பல நேரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு சமரசம் செய்துகொண்டனர் என்பதும் வரலாறு.

ஆனால் இன்று, தேச பக்தியில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என விளம்பரம் செய்துகொள்கின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தின் வலியும் வேதனையும் போராடிய தலைமுறைகளால் சரியான முறையில் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. பெரியாரால் துண்டு தோளுக்கு ஏறியது என்பதை பேண்ட், ஷர்ட் போட்டு வீதிகளில் சுதந்திரமாக உலவுகிற இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்? இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் மட்டுமே. காந்தி, ‘ஸ்வச் பாரத்’துக்கான முகவரிலிருந்து மேலும் ஒரு படி கீழே இறக்கி ஒரு `பனியா’வாக சங்பரிவாரங்களால் சித்தரிக்கப்படுகிறார்.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகப் போராடியவர் என்பதை மறைத்து, ஒரு தலித்தாகவும் சட்ட மேதையாகவும் சுருக்கப்பட்டுள்ளார். இவையெல்லாமே அதிகார வர்க்கத்தினரின் திட்டமிட்ட சூழ்ச்சி. சரியான நபரை, சரியான வரலாற்றை, சரியான கோணத்தில் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதே உண்மையான தேச பக்தியாக இருக்கும்.

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

கிரிக்கெட்டும் சினிமாவும்!

விளையாட்டுப் பக்கத்தில் வெளியான, `இன்று பயிற்சி வேண்டாம்.. ஷாப்பிங் செல்லுங்கள் என்பதைத்தான் கும்ப்ளேவிடம் எதிர்பார்க்கிறார்களா? - கவாஸ்கர் காட்டம்' செய்தியை (ஜூன்.22) வாசித்தேன். இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் கும்ப்ளேவுக்கும் பங்கிருக்கிறது. சினிமா நடிகர்களைப் போல கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்கலாம், தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், நடிகர்களைப் போல இயக்குநர், தயாரிப்பாளர் விஷயத்தில் தலையிட முற்படுவது சரியான போக்கு அல்ல. விளையாட்டு வேறு, நடிப்பு வேறு. இங்கே கடினப் பயிற்சி அவசியம். அதற்கான பயிற்சியாளரை வெறுப்பதும், விமர்சிப்பதும் மோசமான போக்கு. கவாஸ்கரின் கருத்து நியாயமானது.

- முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம்.

நீதி வழங்க வேண்டும்

வெண்ணிலாவின் கட்டுரை (ஜூன்.22) அவரைப் போன்று மனத்தாங்கலுடன் இருக்கும் பல பெற்றோருடைய எண்ணங்களின் வெளிப்பாடு. இரண்டாம் கட்டக் கலந்தாய்வில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்குக் காலியான இடத்தினை ஒதுக்குவதும் முதல்கட்டக் கலந்தாய்வில் விரும்பிய இடம் கிடைக்காத அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதும் நீதிக்குப் புறம்பானது. இதற்கான சரியான வழிகாட்டுதல்களை உடனடியாக உருவாக்குவது அவசியம்.

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

தலைவர்களை உருவாக்குங்கள்!

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று பரவலாகப் பேசுகிறார்கள். அதன் நிமித்தம் நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றிய தகவல்களும் சிறகடிக்கின்றன. ஊடகங்களும் அவர்களைப் பற்றி வரிந்துகட்டிக்கொண்டு எழுதித்தள்ளுகின்றன. வெற்றிடம் ஏற்படும்போது தகுதியான நபரை அந்த இடத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியது மக்கள் ஊடகத்தின் கடமை. எனவே, அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வரும் ஒருவரை, சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒருவரை, விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் ஒருவரை பத்திரிகைகள் அடையாளம் காட்ட வேண்டும்.

- பா.விஜயராமன், திட்டச்சேரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in