இப்படிக்கு இவர்கள்: ரஜினியும் அரசியலும்!

இப்படிக்கு இவர்கள்: ரஜினியும் அரசியலும்!
Updated on
2 min read

தமிழ்நாட்டு அரசியலுக்கு ரஜினியை இழுக்கப் பல ஆண்டுகாலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. அவர் மக்கள் அபிமானம் பெற்ற திரைப்பட நடிகர் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தலைமையேற்றிட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி அவரது நிலைப்பாடு அறியப்படாதது. மத்திய - மாநில உறவு, மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, வேலைவாய்ப்புகளை உருவாக்க அவரது திட்டங்கள் போன்ற எந்த ஒன்றிலும் அவரது கருத்துகள் வெளிவரவில்லை. அவர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளி சாதாரண மக்கள் நுழைய முடியாத கோட்டையாக உள்ளது. எம்.ஜி.ஆரிடம், ‘உங்கள் கொள்கை என்ன?’ என்று கேட்டபோது, ‘அண்ணாயிசம், பெரியாரிசம் ஆகியவற்றின் கலப்பு’ என்று சொன்னார். அவ்விரு இசம்களுக்கு எவ்வித விளக்கமும் கொடுக்காது மழுப்பினார். இன்றைக்கு தமிழ்நாட்டுக்குத் தேவை ஆழ்ந்த அரசியலறிவு உள்ளவரே.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

துணிவே துணை!

மே 11-ல் வெளியான, ‘பில்கிஸ் பானு: துரத்தும் மனசாட்சியின் குரல்’ கட்டுரை வாசித்தேன். 2002-ல் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த திட்டமிட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம். அக்குடும்பங்களுள் ஒன்றான பில்கிஸ் பானு நடத்திய சட்டரீதியான தொடர் முயற்சிகளால் 15 ஆண்டுகள் கழித்தாவது நல்ல தீர்ப்பு வந்துள்ளது. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கொப்ப நரேந்திர மோடி ஆட்சியின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வர பில்கிஸ் பானு குடும்பமே சாட்சியாய் நிற்கிறது. ஆனால், கொடுமை என்னவென்றால், அதே நரேந்திர மோடியின் ஆளுகையின்கீழ்தான் இந்திய தேசமே உள்ளது. பில்கிஸ் பானு போல அனைவரும் அச்சமின்றித் துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- பெரணமல்லூர் சேகரன், சென்னை.

அரசியல் பாடம்!

இளவேனில் எழுதிய ‘ஆனாரூனாவும் நல்லகண்ணு காரும்!’ கட்டுரை வாசித்தேன். பணம் பண்ணுவதற்குரிய தொழிலாக அரசியல் மாற்றப்பட்டுவிட்ட இக்காலகட்டத்தில், தூய்மையான மக்கள் நல அரசியல்வாதி ஒருவருக்கு, பொதுநல விரும்பி ஒருவர் கார் அன்பளிப்பு செய்வதற்குப் பட்ட சிரமங்கள் கண்களில் நீர்த் திவலைகளை வரவழைத்தன. நூறு கார்கள் புடைசூழப் பவனிவரும் அரசியல் தலைவர்கள் வாழ்கின்ற சமகாலத்தில், நல்லகண்ணு ஓர் எளிய.. அரிய உதாரணமாக வாழ்கிறார். அது அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டிய பாடமும் கூட.

- ந.நடராஜசேகரன், தெளிச்சாத்தநல்லூர்.

மாற்றம் தேவை

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. தற்போது முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பணிக்கான தகுதி என்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பாடம் மற்றும் கல்வியியலில் தேர்வரின் அறிவு. மற்றொரு முக்கிய அம்சம், ஆசிரியர் பணிக்குத் தேர்வரிடம் இயல்பாய் அமைந்த திறன் மற்றும் நாட்டம். தற்போதைய நடைமுறையில் இரண்டாவது அம்சம் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, பாடஅறிவு மட்டுமே சோதிக்கப்படுகிறது. தகுதித் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா?

- அ.குருநாதன், சுந்தரராஜன்பட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in