

‘குழந்தையா, குற்றவாளியா?’ என்ற கட்டுரையில் ச.பாலமுருகன் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் பற்றி மேலும் ஆழமாகப் பார்க்கிறபோது ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2000’த்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் அதாவது, சிறாருக்கான வயது வரம்பை 18-லிருந்து16-ஆகக் குறைத்திருப்பதைப் போதுமானதல்ல என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, தவறு என்று சொல்ல முடியாது.
குற்றவாளியின் வயது என்னவாக இருந்தாலும் குற்றத்தின் தன்மையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தம் கொண்டுவந்திருந்தால், அது மேலும் சிறந்த திருத்தமாக இருந்திருக்கும்.
பெண்ணுரிமையும் குழந்தைகள் உரிமையும் சிறப்பாகப் பேணப்படும் ஸ்வீடனில் கிரிமினல் செயல்களுக்கான பொறுப்பேற்கும் வயது 15 என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது. இவ்வாறு அந்நாட்டினர் வைத்திருப்பதற்கான முக்கியக் காரணம், இத்தகைய சிறார்களின் வன்முறைக்கு அப்பாவி சிறார்கள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான்.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடுகிறபோது பதின்ம வயதினர் தங்களது செயல்களின் பின்விளைவுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்பதும், சுற்றுச்சூழலின் ஆதிக்கத்தை மீறி சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவதில் அவர்கள் குறைபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதும் அறிவியல் உண்மை. ஆகவே, பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்குக்கூட சிறார்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படக் கூடாது என்ற கருத்து நியாயமானதே. ஆனால், அதே நேரத்தில் குற்றத்தின் தன்மைக்கேற்ப அவர்களது தண்டனைக் காலம் அமைய வேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்பே.
உதாரணமாக, பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்காக வயதுவந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைவாசம் எனில், சிறார்களுக்கு 5 ஆண்டுகளாவது அளிக்கப்பட வேண்டும். கொலைக் குற்றத்துக்கு வயதுவந்தவருக்கு ஆயுள் சிறை (ஆயுள் முழுமைக்குமானது) எனில், சிறார்களுக்கு 14 ஆண்டுகளாவது தரப்பட வேண்டும்.
கொடூரமான குற்றமாக இருந்தாலும் 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே என்றும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கான வயது வரம்பைக் குறைத்துவிடக் கூடாது என்றும் வாதிடுவது பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.
-க. திருநாவுக்கரசு, அரசியல் விமர்சகர்.