Published : 30 Apr 2019 08:13 am

Updated : : 30 Apr 2019 08:13 am

 

இப்படிக்கு இவர்கள்: புத்துணர்வூட்டும் மாற்றங்கள்

தமிழ்த் தாத்தாவை நினைவுகூரல்

உவேசா நினைவு தினமான அவருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாகக் கட்டுரை வெளியிட்ட இந்து தமிழுக்கு நன்றி. இக்கட்டுரை இதுவரை பேசப்படாத அம்சங்களோடு வெளிவந்துள்ளது. ஒரு ஆளுமையின் நினைவு தினத்தில் அவரை நினைவுகூர்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சமகாலப் பிரச்சினையையும் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் பொருட்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

- இரா.முத்துக்குமரன், தஞ்சை.

வாசிப்பை விஸ்தரிக்கும் ‘நடைவழி நினைவுகள்’

ஞாயிறுதோறும் சி.மோகன் எழுதிவரும் ‘நடைவழி நினைவுகள்’ தொடர் எனக்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தருகிறது. நான் ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் எழுத்தாளர்கள் குறித்து வாசிக்கும்போது அவரது படைப்புகளை வேறொரு கோணத்தில் அணுகுவதற்கான முகாந்திரமாக இருக்கிறது. அதுவே இதுவரை வாசித்திராதவராக இருந்தால், அவரைத் தேடிப்போகும் உத்வேகத்தைத் தருகிறது. மிக முக்கியமாக, எனது விருப்பத்துக்குரிய எழுத் தாளர்களுக்கு விருப்பமான புத்தகங்களை சி.மோகன் குறிப்பிடுவதால் அதையெல்லாம் ஆர்வத்தோடு தேடிச்சென்று வாசிக்கிறேன். இது எனது வாசிப்பை மேலும் விஸ்தரித்துச் செல்வதாக இருக்கிறது.

- ரம்யா ரமணன், சென்னை.


விமான சேவையை விரிவாக்க வேண்டும்

ஏப்ரல் 26 அன்று வெளியான ‘ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி: விமானப் போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் சவால்’ தலையங்கம் படித்தேன். பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமேயானது விமானப் பயணம் என்றிருந்த நிலை கடந்த சில ஆண்டுகளில் மாறி, சாமானியர்களும் பயணிக்க முடியும் என்ற சூழல் உருவானது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம். விமானப் பயணக் கட்டணம் நிலையாகவும் மலிவாகவும் இருப்பதால்தான் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. வேலைவாய்ப்பு, வர்த்தகத் துறை வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் தாண்டி சாமானியர்களின் விமானப் பயணம் என்பது சமூக மாற்றத்துக்கான ஒரு குறியீடுபோலவும் இருக்கிறது. தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி இந்தியா போன்ற பரந்து விரிந்த, உயர் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் உள்நாட்டு விமான சேவை பெரிய அளவில் விரிவுபட வேண்டிய தேவையை உணர்ந்து அரசு செயலாற்ற வேண்டும்.

- பாலசுப்பிரமணியன், மதுரை.

காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றேன்

இந்து தமிழின் ‘வானவில் அரங்கம்’ பகுதியில் வெளியான ‘நினைவுகளின் வடிவங்கள்’ கட்டுரை படித்தேன். சென்னையில் நடைபெறும் ஓவியக்காட்சி தொடர்பானது என்றாலும், நினைவுகளை வடிக்கும் ஓவியம் எப்படி என்பதை ஒரே ஓவியம் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. நான்கு பிரகாரம், ஓடுகளின் மேல் காக்கை, முன் பக்கக் கதவின் மேல் தெய்வச் சிற்பம், இறுதியாகக் கொல்லைப்புறக் கதவு எனக் காலச்சக்கரத்தில் பின்னோக்கிக் கொண்டுசென்று ஒரு பழங்கால வீட்டின் கணபரிமாணத்தை நம் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

- ஜீவன். பி.கே., கும்பகோணம்.

புத்துணர்வூட்டும் மாற்றங்கள்

ஏப்ரல் 29 அன்று வெளியான ‘புரிதலே சிகிச்சைதான்’ எனும் தலைப்பில் கோமதி ராமசாமி எழுதிய பத்தியைப் படித்தேன். பொதுவாக, இதுபோன்ற பகுதிகளைக் கண்டும் காணாமல் கடந்துசெல்லும் எனது போக்கை மடைமாற்றி தன் பக்கமாக இழுத்தது அதன் அற்புதமான தலைப்புதான். மேலும், கடைசி வரியில் முத்தாய்ப்பாக அமைந்த ‘நோய் என்று ஏதுமில்லை; நோயுற்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள்’ எனும் சாமுவேல் ஹானிமனின் அதி நுட்பமான உளவியல் சொல்லாடல் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஒரு வரி நமது சிந்தனைகளை எங்கெங்கோ கூட்டிச்செல்கிறது. இனி இந்த ஓரப்பத்தி பகுதியைத் தொடர்ந்து வாசிக்க விருப்பம். சமீப காலங்களில், அவ்வப்போது வெவ்வேறு சின்ன சின்ன அழகிய மாற்றங்களோடு நடுப்பக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. மாற்றங்கள் புத்துணர்வூட்டுவதாக இருக்கின்றன.

- எம்.பாஸ்கர், புதுச்சேரி.

Popular Articles

You May Like

More From This Category

keezhadi-excavation

கீழடிக்கு வயது 2600

கருத்துப் பேழை

More From this Author