

‘ஞாயிறு களம்’ பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவத்தின் ஆளுநர் நியமனம் பற்றிய அலசலைக் கண்டேன்.
இந்திய ஏழைகள் ஓரளவுக்கேனும் நம்பிக்கொண்டிருப்பது நீதிமன்றங்களைத்தான். நீதிமன்றம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத நீதியரசர்களின் நேர்மைதான்.
சதாசிவம் உச்ச நீதிமன்ற நீதியரசராகப் பொறுப்பேற்றபோது, வாழ்த்தாத நெஞ்சங்கள் எல்லாம் அவரை வாழ்த்தின - ஒரு தமிழர் அலங்கரிக்கும் உயர்ந்த பதவி என்பதற்காக. ஆனால் இன்று, எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய முடியாத - மிகமிகச் சாதாரண - எந்த தகுதியுமே தேவையில்லாத - ஓர் அரசியல் பதவியை ஏற்றுக்கொண்டதில் ஏராளமான கண்டனக் கணைகளை இப்போது அவர் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.
அவர் பதவி ஏற்கும் நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘நான் விவசாயம்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சொல்லுங்கள்... நான் மீண்டும் விவசாயத்துக்கே திரும்பிவிடவா.?' என்று கேட்டார். ஆளுநர் பதவிக்கு எந்த வகையிலும் தரம் தாழ்ந்ததில்லை விவசாயம்.
தங்கள் சார்புச் செயல்பாடுகளைத்தான் அரசு அவர்கள் வழியாகச் செயல்படுத்துமே தவிர, இவர்களைக் கேட்டு அரசு இயங்காது. அநீதியின் வடிவெடுத்து வரும் பொய்மான்களை அடையாளம் காட்டுவதுதான் உண்மையான நீதிமான்களின் வேலை. நீதிமான்களே இப்படி முடிவெடுத்தால் அப்புறம் நீதியின் நிலை?
நீதியரசர் சதாசிவம் மீது மக்கள் கொண்ட அன்பும் மதிப்பும் வேறு. அதை ஒரு பதவிக்காக இழப்பது உசித மல்ல. ஏனெனில், மக்கள் நெஞ்சங்களின் அரியாசனம் என்பது ஆயிரம் ஆளுநர் பதவிகளை விட உயர்ந்தது.
- அத்தாவுல்லா,நாகர்கோவில்.