

சென்னை புத்தகக்காட்சி சிறப்புப் பக்கங்களால் சில நாட்களாக வாசகர்களுக்கு இடமில்லாது போனது வருந்துதற்குரியது. ஆனாலும், வாசகர்களின் எதிர்வினைதான் இதழுக்குப் பெருமை சேர்க்கும். ‘முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி அமைப்புகள்’ (ஜனவரி-18) கட்டுரை பொருள் பொதிந்தது. பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை தனது பிரதிநிதி இருப்பது ஒவ்வொரு குடிமகனது அடிப்படை உரிமையாகும்.
தான் செலுத்தும் வரி நன்முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்று குடிமக்கள் அறிய வேண்டும். தனது பிரதிநிதி மூலம் தம் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். ஊழல் நிறைந்தவையாக இருந்தாலும், மக்கள் தம்மைக் கண்காணிக்கின்றார்கள் என்ற அச்சம் சிறிதாவது ஊழலின் ஆழத்தைக் குறைக்க உதவும். பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த மக்கள் குரல் கொடுக்காமல் இருப்பதை அரசு தேர்தல்களைத் தள்ளி வைக்கப் பயன்படுத்திக்கொள்கின்றது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
சிறார் இலக்கியங்கள்: சரியான மதிப்பீடு
ஜனவரி 15 அன்று ஆதி வள்ளியப்பன் எழுதியுள்ள ‘தமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு’ என்ற கட்டுரை உண்மையான கவலைகளையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது. சிறார்களால் கொண்டாடப்படும் ஈர்ப்புமிக்க தன்மையில் இன்றைய சிறார் இலக்கியங்கள் படைக்கப்படவில்லை என்ற நோக்கிலான மதிப்பீடு ஏற்கத்தக்கதாகும். இலுப்பைப் பூ, ஆலை வெல்லம் என்று அழகியலான குறியீட்டு முடிப்பு வெறும் முடிப்பல்ல, சிறந்த சிந்தனை வெடிப்பும் ஆகும். கல்விப்புலத்தில் நேரிய மாற்றங்களைக் கோரும் சிறந்த கட்டுரை.
- முனைவர் சு.மாதவன், தமிழ் உதவிப் பேராசிரியர், புதுக்கோட்டை.
லெனினுக்குச் சிறந்த அஞ்சலி
உலகின் மகத்தான மனிதகுல விடுதலைச் சிற்பி லெனினின் நினைவு நாளில், அவரின் உன்னதச் செயல்பாட்டையும், இலக்கியத்தின் மீதான அவரது மதிப்பீட்டையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இரா.நாறும்பூநாதனுக்குப் பாராட்டுகள்! இலக்கியமே புரட்சியின் இயக்குவிசை என்பதை மெய்ப்பித்த ரஷ்யப் புரட்சியின் வரலாற்றையும் விடுதலையை நேசிக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்த 5 நிமிட வாசிப்பு நிச்சயமாய் உருவாக்கும்.
- எ.பாலுச்சாமி, பட்டாபிராம்.
வியக்கவைக்கும் வாசிப்பின் பெரும்பரப்பு
'இந்து தமிழ் திசை' தொடர்ந்து வெளியிட்ட சிறப்புப் பக்கங்களால் அழுத்தம் கூடப்பெற்றதன் விளைவாய், முதன்முதலாக இந்த வருடம் சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றுவந்தேன். ஆங்கில மொழிவழிக் கல்வியில் பயின்று வந்திருக்கிற அடுத்த தலைமுறை, வாசிப்பில் அசுவாரஸ்யம் காட்டுவதாக எண்ணிவந்த எனக்கு, அந்தக் கருத்து புத்தகக்காட்சியில் உடைபட்டுப்போனது. கல்கி, சுஜாதா, கவிக்கோ என சரித்திரம், நவீனம், கவிதைகள் எனத் தேடித் தேடி இளைய தலைமுறை வாங்கியது சந்தோஷம் தந்தது.
ஆரோக்கிய உணவு, உடல்நலம் குறித்த புத்தகங்கள் விற்பனை கணிசமாக இருந்ததைக் காணும்போது மக்களுக்கிடையே விழிப்புணர்வு கூடியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பக்தி, ஆன்மிகம், ஜோதிடப் புத்தகங்களுக்கு இணையாக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸியப் புத்தகங்களும் அதிகம் விற்றிருக்கின்றன. இதில் வியப்படையச் செய்தது என்னவென்றால், ஒரே நபர் இந்த இரண்டு வகைப் புத்தகங்களையும் வாங்குவதுதான். இரு எதிரெதிர் எல்லைகளையும் தெரிந்துகொள்ளும் தேடல் நம் தமிழர்களின் வாசிப்பின் பெரும்பரப்பை எனக்கு உணர்த்தியது.
- ஏ.எம்.நூர்தீன், சோளிங்கர்.