Published : 23 Jan 2019 10:43 am

Updated : 23 Jan 2019 10:43 am

 

Published : 23 Jan 2019 10:43 AM
Last Updated : 23 Jan 2019 10:43 AM

இப்படிக்கு இவர்கள்: மாணவிகளைக் காப்போம்

திருவண்ணாமலை வேளாண் மைக் கல்லூரி மாணவிக்குப் பேராசிரியர், பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் புகார் அதிரவைக்கிறது. அதற்கு இரண்டு பேராசிரியைகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது வேதனை தருகிறது. அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக, அந்தக் கல்லூரியில் பணிபுரிந்துவந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில மாதங்கள்தான் ஆகின்றன.

அதற்குள் திருவண்ணா மலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழகக் கல்வி நிலையங்களிலிருந்து இப்படிப் புகார்கள் வருவது அதிர்ச்சி தருகிறது. இதுபோன்ற புகார்கள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்காலக் கனவுகளுடன் படிக்கவரும் மாணவிகளுக்கு இத்தகைய கொடுமைகளை நிகழ்த்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

- அனுசுயா தேவி, மின்னஞ்சல் வழியாக…

 

நீர் மேலாண்மை: எங்கு தவறுகிறோம்?

ஆகஸ்ட் 23-ல் வெளியான ‘காவிரியிடம் தோற்றாலும் கேவலமே’ கட்டுரை படித்தேன். ‘வெள்ளத்தைப் பிடித்துவைக்க முடியாது. இருந்தாலும், கடைமடைக்குத் தண்ணீர் எட்டாதபோது கொள்ளிடத்துக்கு அதையே வெள்ளமென்று அனுப்புவது தோல்விதான்’ என்று கட்டுரையாளர்

தங்க. ஜெயராமன் குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமானது. காவிரியில் இவ்வளவு தண்ணீர் வந்தும் நம்மால் அதைச் சேமிக்க முடியவில்லை. இதையெல்லாம் கர்நாடக அரசு கவனித்துக்கொண்டிருக்கும். இனி தமிழ்நாடு தண்ணீர் கேட்டால் தண்ணீரைச் சேமிக்க வழியில்லாமல், வீணாகக் கடலில் கொண்டுவிடும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்கிறது என்று கர்நாடக அரசு வாதம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 - கே.ஜகநாதன், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில்…

 

வெள்ளமும் குற்றச்சாட்டும்

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மாநில அரசுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்படுவதாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், உரிய எச்சரிக்கை விடுக்காமல் அணைகளைத் திறந்ததுதான் பெரும் வெள்ளத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியிருக்கிறார். கேரள அரசு இதை மறுக்கிறது. இந்தப் புகார் எந்த அளவுக்குச் சரியானது என்று விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேசமயம், இப்படிப்பட்ட பேரிடர் சம்பவங்களின்போது முன்வைக்கப்படும் அரசியல் குற்றச்சாட்டுகள், மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது.

- காமராஜ் முத்தையா, சென்னை.

 

தமிழகம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. சென்னை உட்பட பல இடங்களில் சிறிய அளவில் மழை பெய்தாலே சாலைகளில் வெள்ள நீர் திரண்டுவிடுகிறது. மழை பொழியாத பருவங்களில், நகரங்களின் சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் சரிசெய்யப்பட வேண்டும். கிராமங்களில் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். கேரளம், கர்நாடகம் என்று அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை மனதில் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

- எம்.சிவக்குமார், திண்டுக்கல்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author