Published : 28 Dec 2018 09:48 am

Updated : 28 Dec 2018 09:48 am

 

Published : 28 Dec 2018 09:48 AM
Last Updated : 28 Dec 2018 09:48 AM

இப்படிக்கு இவர்கள்: அவர்கள் தலித்துகள்தான்... ஆனால், கம்யூனிஸ்ட்டுகள்!

அவர்கள் தலித்துகள்தான்... ஆனால், கம்யூனிஸ்ட்டுகள்!

வெண்மணி படுகொலைக்குக் காரணம், உழைப்பாளி தலித் மக்கள் கூலி உயர்வு கேட்டதாலா, சாதி தீண்டாமையா என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. வெண்மணி வழக்கில் நாகப்பட்டினம், கிழக்கு தஞ்சாவூர் கோட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் சொன்ன வாக்குமூலம், அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 06.04.1976-ல் அளித்த தீர்ப்பு இரண்டிலும் அந்தக் கேள்விக்கான தெளிவான பதில் இருக்கிறது. வெண்மணி வழக்கில் குற்றவாளிகளின் கோபத்துக்குக் காரணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த விவசாயச் சங்கங்கள்தான். டிசம்பர் 25 அன்று வெளிவந்த ‘கீழவெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு!’ என்ற ரவிக்குமாரின் கட்டுரை வெண்மணியின் இந்த உண்மையைத் தவிர்த்திருக்கிறது.

1927-ல் தொடங்கி வெவ்வேறு சமயம் நடத்தப்பட்ட விவசாயிகள் மாநாடு, முத்தரப்பினர் ஒப்பந்தம், சதி வழக்குகள் குறித்து அக்கட்டுரை பேசுகிறது. 1944 மன்னார்குடி ஒப்பந்தம் பற்றிப் பேசும் அக்கட்டுரை தலித்துகளின் பிரதிநிதிகள், நில உடைமையாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பினர் பேசிய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்தத்தில் தலித், தலித் அல்லாதவர் என்ற எல்லைகளைக் கடந்து மன்னார்குடி ஒருமித்து நின்ற பெருமிதத்தை உணர முடியும். பேச்சுவார்த்தைகளில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளாகக் களப்பால் குப்புசாமி, ஆர்.அமிர்தலிங்கம், டி.ராசகோபாலன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் மூவரும் கம்யூனிஸ்ட்டுகள். பிறப்பால் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

வெண்மணி நிகழ்வை வரலாற்றுபூர்வமாகச் சொல்கிறபோது அதன் உண்மைப் பின்னணியோடு சொல்வதுதான் திரிபுகளுக்கு இடம்தராததாக அமையும். வெண்மணியில் எரிக்கப்பட்ட அனைவரும் தலித்துகள் என்பது உண்மைதான். அதேபோல் அவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மை.

- வெ.ஜீவகுமார், தஞ்சாவூர்

 

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கலாம்!

டிசம்பர்-27 அன்று வெளிவந்த சத்துணவுத் திட்டம் பற்றிய கட்டுரை படித்தேன். அதுகுறித்து விவாதிப்பதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. மிக முக்கியமாக, அரசு மேனிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையில் மட்டுமே சத்துணவு வழங்கப்பட்டுவருகிறது. இதனால் 11, 12-ம் வகுப்பு மாணவர்களில் பலர் இன்றும் பசியோடு பள்ளிக்கு வந்து செல்லும் அவலநிலை தமிழகத்திலேயே இருக்கிறது. பதின்பருவத்தினருக்கு ரத்தசோகை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்திக்கொண்டே அவர்களைப் பள்ளிகளுக்கு அழைத்து பட்டினி போட்டுக்கொண்டிருக்கிறோம். பசியோடு அவர்களால் எப்படிப் பாடங்களைக் கவனிக்க முடியும்? சத்துணவுத் திட்டத்தை மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பதைப் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.

- தி.பரமேசுவரி, மேலபுலம்.

உண்மை தெரியவரும்

டிசம்பர்-24 அன்று வெளியான ‘பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?’ கட்டுரை வாசித்தேன். அருமையான கட்டுரை. பெரியாரைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு, இது உண்மையைத் தெரிவிக்கும் என நம்புகிறேன்.

- அழகேசன், மின்னஞ்சல் வழியாக..

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author