

‘பிரதமரே, இயர்போனைக் கழற்றுங்கள்... சாமானியரின் குரல் கேட்கட்டும்!’ கட்டுரையில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு எதற்குத் தேவை, எதற்கு அதிரடியாக அதை மேலும் அதிகரித்தே ஆக வேண்டும் என்பதற்கு மோடி அரசிடம் பதில் இல்லை. எதிர்க் கட்சியாக இருக்கும்போது தாங்களே எதிர்த்ததை, ஆளும் கட்சியாக வந்தவுடன் முதல் வேலையாகச் செய்யத் துடிக்கும் அராஜகத்தை இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியுள்ளார். மசோதாவை மக்கள் பிரதிநிதிகள் நிராகரிக்க வேண்டும்.
1990-களில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களைத்தான் நமது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அண்மைக் காலத்திய மேலை நாடுகளின் பொருளாதார நெருக்கடி உலக நெருக்கடியாக அழுத்திக்கொண்டிருப்பதை உணர மறுப்பதை என்னவென்று சொல்வது? தேச பக்தி, வளர்ச்சி, மாற்று அரசியல் என்ற முழக்கத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடைப்பிடித்த அதே கொள்கையைத்தானே கடைப்பிடிக்கின்றனர். தேச நலனைப் பலியிட யாருக்கும் அனுமதி இல்லை.
தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையில் தன்னுயிரையே பறிகொடுத்த நாயகன் ஹேமந்த் கர்கரேவுக்கே ஈட்டுத் தொகை தகுதி இல்லை என்று சாதிக்கும் தனியார் பலிபீடத்தில் அப்பாவி மக்களின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு தாராளமயக் கொள்கையின் காதலர்களது பதில் என்ன?
- எஸ் வி வேணுகோபாலன், சென்னை-24.