Published : 18 Aug 2014 10:10 am

Updated : 18 Aug 2014 12:21 pm

 

Published : 18 Aug 2014 10:10 AM
Last Updated : 18 Aug 2014 12:21 PM

இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?

பொதுவாக, இயற்கைச் சூழலைச் சீரழிப்பதில் தொழில் துறையினரின் அநீதியான செயல்பாடுகளைப் பேச ஆரம்பித்தாலே, ‘வளர்ச்சிக்கு எதிரான முத்திரையை' குத்துவது இந்திய இயல்பு. வளர்ச்சியே காலத்தை முன்னகர்த்துகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பதற்கான வரையறை எது; அதில் தொழில் துறையினருக்கான எல்லை எது? இந்தப் பயணம் எனக்கு இந்த எல்லையைக் கறாராக வரையறுத்துக் காட்டியது. அவலமான மொழியில், கொடூரமான தோற்றத்தில், உக்கிரமாகக் காட்டியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆலையும் அழிவும்

தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலைகள் இருக்கின்றன. சூழலை நாசப்படுத்துவதோடு, உயிர்களைக் காவு வாங்கிவிடக் கூடிய அபாயம் மிக்க ஆலைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அதிகபட்சமாக, பயணங்களின்போது நம் மூக்கில் விருட்டெனப் புகும் நெடி, ஆலையின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரும்புகை, எங்கோ கசிந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைகளைத் தாண்டி, இந்த ஆலைகள் சூழல் சார்ந்து பொதுத்தளத்தில் கவனத்தை ஈர்ப்பதில்லை.

ஒரு ஆலைக்காகச் சில நாட்களை ஒதுக்க முடியுமானால், ஒரு ஆலையால் சூழலை எவ்வளவு மாசுபடுத்த முடியும் என்பதை சாஹுபுரம் பயணம் எனக்கு உணர்த்தியது.

சாஹுபுரத்தின் வாசல்

சாஹுபுரத்தின் முன்வாசலுக்குச் செல்வது எளிதான பயணம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே சுமார் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். சாஹுபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், டி.சி.டபிள்யூ. (தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்) ஆலையின் முகப்பு உங்களை வரவேற்கும். அங்கே நீங்கள், சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் என்கிற மனிதர், எப்படி இந்த நாட்டின் முதல் சோடா ஆஷ் ஆலையை குஜராத்தின் தாரங்கதாராவில் நிறுவினார் என்பதில் தொடங்கி, அந்த ஆலை எப்படியெல்லாம் விரிவாக்கப்பட்டு, தமிழகம் வந்து இன்று பல நூறு கோடிகளைக் குவிக்கும் வெற்றிகரமான நிறுவனம் ஆனது என்கிற சாதனைச் சரித்திரம் வரை உங்களுக்குக் கிடைக்கும்.

சாஹுபுரத்தின் கொல்லைப்புறம்

சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்துக்குச் செல்லும் பயணம் கொஞ்சம் சிரமமானது. காயல்பட்டினம் கடற்கரையோரமாக நடந்து சென்று, கொம்புத்துறைப் பகுதியை அடைந்த பின் வரும் புதர்ப் பகுதியில் உள்ளே நுழைந்து சில கி.மீ. தூரத்தை முட்கள் சூழ்ந்த மணல் பாதையில் கடந்து சென்றால், சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்தை அடையலாம். இப்படிச் செல்லும்போது மக்களிடம் பேசினால், எப்படியெல்லாம் வளர்ச்சியை உருவாக்குகிறேன் என்று சொல்லி,

டி.சி.டபிள்யூ. ஆலை, நிலத்தை சலுகையில் வாங்கி, ஒரு ஊராக்கி, ஆலை நிறுவனர் சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் பெயரால், அதற்கு சாஹுபுரம் என்று பெயரிட்டுக்கொண்ட கதையில் தொடங்கி, கடலையே தன் ஆலையின் கழிவுத் தொட்டியாக்கிக்கொண்டது வரை கூறுவார்கள்.

நீராதாரக் கொலை

சாஹுபுரம் ஆலையின் பின்புறம் அழைத்துச் சென்று காட்டிய பெரியவர் சேக்கணா, “எங்க ஊரோட ஒரு பகுதி தம்பி இது. ஏதோ ஒரு ஆலை வரும், மக்களுக்கு வேலை வாய்ப்பு கெடைக்கும், வளர்ச்சி வரும்முன்டு சந்தோஷமா வரவேத்தோம். இன்னைக்கு, தொட்டா பஸ்பமாக்கிடக்கூடிய பலவித ரசாயனங் களையும் இங்க கொண்டாந்துட்டாங்க. இப்பம் பாருங்க, ஆலையை ஒட்டி இருக்குற ஒரு நீரோடையையே எப்படிக் கொன்னுட்டாங்கன்டு. வெறும் கழிவுநீரு இல்ல தம்பி இது, ரசாயனக் கழிவு. இது கடல்ல கலந்து கடல் எப்பிடி செவப்பா இருக்கு பாருங்க. கடலோட நெறமே மாறுதுன்டா எத்தன லட்சம் லிட்டர் இப்பிடிக் கடல்ல கலந்துருக்கும்? அது பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி?” என்கிறார்.

அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். என் கண்கள் அப்படியே அந்த நீரோடையில் குத்தி நிற்கின்றன. இப்படி ஓடையிலிருந்து வெளியேறும் நீர், தடையில்லாமல் கடலுக்குச் செல்ல ஏதுவாகக் கடலை நோக்கி வடிகால் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

“யாரும் வர முடியாத எடம் இது. ஆள் அரவம் கிடையாது. ஆனா, ஆலைக்காரங்க ஆளுங்க இங்கே கூடாரம் போட்டு உட்கார்ந் திருப்பாங்க. நடுராத்திரில கால்வாயை வெட்டிக் கடல்ல கலக்க விடுற வேலை நடக்கும். நாங்க வர ஆரம்பிச்சதும் வேட்டை நாய்ங்களை வெச்சுத் துரத்த விரடறது, மெரட்டுறதுன்டு நிறையப் பண்ணிப் பார்த்தாங்க.

நாங்க தனியாளா இருந்தா வேலைக்காவாதுன்டு ஊருல ஒரு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பைத் தொடங்குனோம். இங்கே தினம் வர்றது, போட்டோ எடுக்குறது, அரசாங்கத்துக்கு ஆதாரபூர்வமா புகார் அனுப்புறதுன்டு களத்துல எறங்குனோம். ஆஷீஷ் குமார் ஆட்சியரா இருந்தப்போ, இங்கே எங்க புகாரைக் கேட்டு நேர்ல வந்தார். எவ்வளவு பெரிய கொடுமை இதுன்னு கொந்தளிச்சுட்டார். நடவடிக்க எடுக்குறதுக்குள்ள அவரு வேற எடம் போய்ட்டார். இப்பம் உள்ள ஆட்சியருகிட்ட மறுபடியும் பூரா சரித்திரத்தையும் கொடுத்து, நம்பிக்கையோட காத்திருக்கம்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆலையிலிருந்து புகை வெளியேறுகிறது. திணறவைக்கும் வாடை காற்றை நிறைக்கிறது. “ஆரம்பமாயிட்டு… கடவுளே” என்று சொல்லியவாறே தலையில் அடித்துக்கொள்கிறார்.

ஒரு ஊர் பிரச்சினையா இது?

காயல்பட்டினம் மக்கள், தங்கள் ஊர்க்காரர்கள் புற்றுநோயால் மாண்டுபோக முக்கியமான காரணம் சூழல் சீர்கேடுதான் என்று வலுவாக நம்புகிறார்கள். “இந்தப் படங்களையெல்லாம் பாருங்க” என்று காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கே. சாலிஹ் காட்டும் படங்கள், ஆலை உருவாக்கும் அவலச் சூழலுக்கு வலுவான ஆதாரங்கள்.

“இது எங்க ஊர் பிரச்சினை மட்டும் இல்ல சார். ஆலையைச் சுத்தியும் பாருங்க, இந்தப் படங்களையெல்லாமும் பாருங்க... இப்பிடி ரசாயனக் கழிவு பட்ட, இங்கெ வெளையுற நெல்லை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம்?

வளர்ச்சி வளர்ச்சினு பேசுறாங்களே... அந்த வளர்ச்சியை அனுபவிக்கிறது யாரு? அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு? இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக் கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையை யெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக் கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா?”

காலில் மோதும் அலைகளின் சிவப்பு நிறம் துடிக்கும் கடலின் ரத்தமாகச் சூழ்கிறது.

என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

இவையெல்லாம் பற்றி டி.சி.டபிள்யூ. ஆலை நிர்வாகத்தின் கருத்து என்ன? தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விவரம் கேட்டவர்கள் அதற்குப் பின் தங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆலையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் office@shpm.dcwltd.com எனும் மின்னஞ்சல் முகவரியோ மின்னஞ்சலைத் திருப்பியடிக்கிறது. ஆலை நிர்வாகத்தினர் பதில் அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

நீர்நிலம்வானம்ஆலைகள்ரசாயனக்கழிவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author