

‘குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கு ஆள் பிடிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள்! - தரகர்களுக்கு சொந்தப் பணத்தை வழங்கும் அவலம்' செய்தி படித்தேன். 1956 முதல் 1980 வரை குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள். குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையைப் பெண்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், மயக்க மருந்து கொடுத்து, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது.
ஆனால், ஆண்களுக்குச் செய்யப்படும் சிகிச்சைக்கு மயக்க மருந்து கிடையாது. ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்று அன்றாட வேலைகளைச் செய்யலாம். இந்தத் தகவல் பொதுமக்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் ஒரே அளவிலான ஊக்கத்தொகையே அரசால் வழங்கப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யக் கூடுதலாக அரசு செலவிடும் மயக்க மருந்து மற்றும் மருத்துவமனையில் தங்கியிருப்பதற்கான செலவு, மருத்துவர் மற்றும் பணியாளர்களின் உழைப்பு, பெண்கள் அனுபவிக்கும் வேதனை போன்றவற்றைக் கணக்கிட்டு, ‘குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை’ செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 10,000-க் குக் குறையாமல் கொடுத்தால், ஆண்கள் தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொள்வார்கள். மேலும், ஊடகங்களும் ஆண்களுக்கான கு.க. அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- ஜேவி, சென்னை.