

எழுத்தாளர் குமாரசெல்வாவின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. விளவங்கோடு வட்டார மொழியில் உலகளாவிய உணர்வுகளை, பேருண்மைகளை, சமூகப் பொதுவெளியில் கவனிப்பாரற்று வாழ்பவரையும் பொருட்படுத்தி எழுதுகிற எழுத்தாளர் குமாரசெல்வா. எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் சமூகச் செயல்பாட்டாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.
குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்தோடு இணைப்பதற்காக நடந்த மாபெரும் போராட்டத்தை, ஒரு ஒற்றைத் தலைமையின் எல்லைக்குள் சுருக்குவது என்பது அந்தப் போராட்டத்தின்போது நடைபெற்ற பலரின் உயிர்த் தியாகம் உள்ளிட்ட வீரம்செறிந்த வரலாற்று நிகழ்வுகளை, குமரிமாவட்ட அரசியல்வாதிகளின் பொதுப்புத்திக்கு ஒப்பாக உதாசீனப்படுத்துவதா இல்லை, சாதி அடையாள அரசியல் என்று வகைப்படுத்துவதா எனத் தெரியவில்லை. ஏனென்றால், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களை நினைவுகூர்வது என்பதும் அதனூடாகப் பலியானவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவரல்ல என்ற தகவலும் சிலருக்கு சில அரசியல் அசெளகரியங்களை ஏற்படுத்த வல்லது.
கலைஞன் என்பவன் கால எல்லைகளைத் தாண்டி பேருண்மைகளையும் அதன் மறுபக்கங்களையும் பதிவுசெய்பவனாக இருப்பவன். குமாரசெல்வா இந்தப் போராட்டம்குறித்தான ஒரு படைப்பை வெளிக்கொணர்ந்தால் சிறப்பாக இருக்கும்.
- சுஜித் லால், மார்த்தாண்டம்.