Published : 22 Jun 2018 07:54 AM
Last Updated : 22 Jun 2018 07:54 AM

இப்படிக்கு இவர்கள்: பிரமிளுக்கு முதல் விருது!

வே.மு.பொதியவெற்பன்,

கோயம்புத்தூர்.

பிரமிளுக்கு முதல் விருது!

லை இலக்கியப் பயணி சி.மோகனின் ‘நடைவழிக் குறிப்புகள்’ எனக்கு மிகவும் பிடித்த ஒரு நூல். அவர் இந்து தமிழ் நாளிதழில் எழுதிவரும் நடைவழி நினைவுகளில் (ஜூன் - 17) பிரமிள் என்கிற தருமு சிவராமு பற்றி ஒரு தகவல் விடுபட்டுள்ளது. 1995-ல் சிலிக்குயில் புத்தகப் பயணம் பிரமிளுக்குப் புதுமைப்பித்தன் சாதனை வீறு விருது வழங்கியது. 1996-ல் நியூயார்க் தமிழ்ச் சங்கம் புதுமைப்பித்தன் பெயரிலான விளக்கு விருதினை வழங்கியது. முதலில் வழங்கப்பட்ட விருது குறித்த விவரம் சி.மோகனின் கட்டுரையில் இல்லை. புதுமைப்பித்தன் பெயரில் அறிவிக்கப்பட்ட விருது, அவரது பெயரை விலக்கி விளக்கு விருதெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரமிள் பெயரில் விருது வழங்கி எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழில் பிரமிளுக்கு வழங்கப்பட்ட முதல் விருதுபற்றி முறையாக ஆவணப்படுத்தவே இக்கடிதம்.

சந்தானகிருஷ்ணன், சென்னை.

அனுராதா ஸ்ரீராமின் நடிப்பு பிரமாதம்!

நா

டக உலாவில் இரண்டு ரமணர்கள் விமரிசனம் படித்தேன். பாம்பே சாணக்யாவின் ‘மகரிஷி’ நாடகத்தை நானும் பார்த்தேன். இதில், ரமணரின் தாயாக பாடகி அனுராதா ஸ்ரீராமின் நடிப்பு பிரமாதம். தாயின் பிரிவாற்றாமை, வேதனை, ஏக்கம், ஏமாற்றம் என்று அத்தனை உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், பகவான் பிரியத்துடன் வளர்த்த பசு (லட்சுமி) சம்பந்தப்பட்ட காட்சி வரும்போது, மேடைக்கு அழைத்துவரப்படும் பசுவின் முகத்தில் அத்தனை தேஜஸ். விமரிசனத்தில் இந்த இரண்டையும் குறிப்பிட்டிருக்கலாம்!

முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.

தானம் வியாபாரமாகிவிட்டது!

ஜூ

ன் -17 அன்று வெளியான டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய ‘மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்?’ என்ற கட்டுரையைப் படித்தேன். தமிழகத்தில் சேவைத் துறையாக இருந்த மருத்துவத் துறை, இன்று வணிகத் துறையாகி முன்னணியில் உள்ளது கேவலத்தின் உச்சம். ரத்த தானம், உறுப்பு தானம் என்று தானமாகக் கொடுத்ததை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள். தானம் என்ற சொல்லுக்கே பொருளற்றுப்போய்விட்டது. ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, உறுப்பு தானம் என்ற பெயரில் அவர்களின் உயிரையே விலைக்கு வாங்கிப் பணக்காரர்கள் உயிர் வாழும் அவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒருகாலத்தில் ஏழைகளின் உழைப்பை மட்டுமே உறிஞ்சினார்கள். ஆனால், இன்று உயிரையும் உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு உயிரைப் பறித்து இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்பது அறம் சார்ந்தது அல்ல.

மு.வாசுகி, பாப்பிரெட்டிப்பட்டி.

பாலைவனச் சாலை!

சே

லம் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையிலுள்ள இயற்கை எழில் மிகுந்த மலைப் பகுதி மஞ்சவாடிக் கணவாய். அப்பகுதி மக்கள் மேடும் பள்ளமுமாக உள்ள மலையடிவார நிலப் பகுதியை எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே விவசாயம் செய்துவருகிறார்கள். சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை என்ற பெயரில் மலையோரக் காடுகளையும் விவசாய நிலங்களையும் அழித்து, அவற்றின் மரணங்களின் மீது போடப்படும் சாலை, பசுமைவழிச் சாலையாக இருக்காது; பாலைவனச் சாலையாகத்தான் இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x