

எழுத்தாளர் வாஸந்தியின் கூற்று முற்றிலும் உண்மையே. இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு அமானுஷ்ய உலகில் வாழ்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. வீட்டில்கூட எந்நேரமும் காதில் ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டு, ஒரு ஆத்திர அவசரத்துக்கு அம்மா, அப்பா கூப்பிட்டால்கூடக் காதில் விழாது அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்...
மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஓர் எழுத்து வார்த்தையாய் உருமாறி உருக்குலைந்து கிடப்பது இந்த இளையதலைமுறையின் சாதனையா? ஒரு ஆங்கில ஆசிரியையாக மாணவர்களின் இந்த உருக்குலைந்த ஆங்கிலத்தைக் கண்டு பலமுறை உள்ளம் குமுறியிருக்கிறேன்.
கொடுமையின் உச்சகட்டம் என்னவென்றால், இதே ஆங்கிலத்தை பரீட்சையிலும் அவர்கள் உபயோகிப்பதுதான். இதனாலேயே மதிப்பெண்கள் குறைகின்றன (பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல). எல்லா வார்த்தைகளுமே ஓர் எழுத்தாகச் சுருங்கி, கடைசியில் பேச்சு மொழியும் ஒழிந்து மனிதர்கள் ‘பே…பே…' என்று அலையும் நிலை இப்போதே மனக்கண்ணில் தெரிகிறது.
- ஜே .லூர்து, மதுரை.