

வெ. சந்திரமோகன் எழுதிய ‘அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன்' கட்டுரை படித்தேன். காந்தி என்னும் சாந்தமூர்த்தியின் மீது இன்றளவும் அவதூறுச் சேற்றை நம்மவர்கள் அள்ளி வீசிக்கொண்டிருக்கும் வேளையில், அன்றே காந்தியின் வரலாற்றைக் கண்ணியமாக எடுத்து அகிம்சா மூர்த்தியை அகிலமெங்கும் உலவ விட்ட அட்டன்பரோவின் மறைவு நிச்சயம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
பென்கிங்ஸ்லி வடிவில் காந்தியும் காலம் உள்ளவரை திரையில் வலம்வருவார். பொருளாதாரத் தடை ஏற்பட்டபோதும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து வெளிக்கொண்டுவந்த ‘காந்தி' படம், எட்டு ஆஸ்கர் விருதுகளைப் பெறக் காரணம் அட்டன்பரோ என்ற அபூர்வ மனிதரின் அயராத முயற்சியே.
‘காந்தி’ திரைப்படத்தை உருவாக்கிய அட்டன்பரோ இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் படக்காட்சியாக நிரந்தர ஆட்சி செய்வார் என்பது உறுதி.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.