Published : 03 May 2018 08:39 AM
Last Updated : 03 May 2018 08:39 AM

இப்படிக்கு இவர்கள்: நானும் தஞ்சாவூர்க்காரன்தான்!

சாரு நிவேதிதா,

எழுத்தாளர்.

நானும்

தஞ்சாவூர்க்காரன்தான்!

நா

ன் எப்போதுமே பிராந்திய மனோ பாவத்தை ஆதரிப்பவன் அல்ல. ஆனால், ‘தஞ்சை எழுத்தாளர்களின் காலம் முடிந்துவிட்டது’ என்ற ஜெயமோகனின் குறிப்பு மோசமானது. என்னை அவர் பிரெஞ்சு எழுத்தாளன் என நினைத்துவிட்டாரோ? நான் தஞ்சை மாவட்ட எழுத்தாளன்தான். தஞ்சை ப்ரகாஷ் என் முன்னோடி. என் காலம் இப்போது முடியாது. காலம் முடியும்போதுதான் முடியும்.

ஆர்.முருகேசன், அந்தியூர்.

இது பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கான அறிவுரை

மே

2 அன்று வெளியான ‘நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் திரிபுரா முதல்வரே!’ என்ற தலையங்கம் வாசித்தேன். திரிபுராவின் முதல்வராக உள்ள பாஜகவைச் சார்ந்த விப்லவ் குமார் தேவின் சமீபத்திய நகைப்புக்குரிய சர்ச்சை கருத்துக்களோடு கூடிய பேச்சைக் கேட்டு நாடே வியந்தது. தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி நபர்வாரி வருவாய் மட்டும்தான் தேசிய சராசரியைவிடக் குறைவு. சாலை, மின்சாரம், தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்திதான் திரிபுரா மாநிலத் தேர்தலைச் சந்தித்தது பாஜக. தற்போது அந்த அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நடவடிக்கை போன்ற திரிபுரா மக்களின் எதிர்பார்ப்புகளை வாக்குறுதிப் படி நிறைவேற்றும் எந்த உபயோகமான காரியத்தையும் நோக்கி புதிய பாஜக முதல்வர் செல்வதாகத் தெரியவில்லை. மாறாக, சிறுபிள்ளைத்தனமாக அவர் பல கருத்துகளை வெளியிட்டுவருவது நம்பிக்கையுடன் பாஜகவுக்கு வாக்களித்த திரிபுரா மக்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. நாடு முழுவதும் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஞ்ஞானத்துக்குப் புறம்பாக ஒரு முதல்வரே பேசுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இவர் மட்டுமல்ல, பாஜகவைச் சார்ந்த பலரும் இவரைப் போல் பேசுவதுதான் வேடிக்கை. இதன் உச்சகட்டம் பிரதமர் மோடியே தன் கட்சியின் சகாக்களுக்கு வாய்க்கு வந்தபடி தயவுசெய்து மீடியாக்கள் முன்பு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் யாரும் பேச வேண்டாம் என்று கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தலையங்கத்தைப் பொதுவாழ்வில் உள்ள அனைவருக்குமான ‘தி இந்து’வின் அறிவுரையாகவே நான் பார்க்கிறேன்.

நா.புகழேந்தி, பழனி.

கமல்ஹாசனின் உழைப்பில் முன்மாதிரிக் கிராமங்கள்!

மே - 1அன்று திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் சிற்றூராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நிகழ்வுகளைக் கவனித்ததும், மக்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரையில் என்னென்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் என்பதும் ‘மக்கள் நீதி மய்ய’த்தின் தலைவர் கமல்ஹாசனை மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவரது இயக்கம் தத்தெடுக்கும் எட்டுக் கிராமங்களையும் முன்மாதிரிக் கிராமங்களாக மாற்றிக்காட்டும் முயற்சியில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம். அடித்தள மக்களிடம் கலந்து பழகி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசி, அவர்கள் மத்தியில் செயல்பட்டு அரசியலை முன்னெடுத்துச் செல்வாரேயானால், தமிழக அரசியல் தளத்தில் மிகப் பெரிய சக்தியாக அவர் உருவாகும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x