

அரவிந்தன் எழுதிய >‘உனுக்கு இன்னா பிரச்சன நைனா?' கட்டுரை வாசித்தேன். சென்னைத் தமிழ்பற்றி இதுவரை நான் கொண்டிருந்த கருத்தை நெற்றிப் பொட்டில் அடித்து மாற்றி விட்டது கட்டுரை. ஆங்கிலம், உருது, தெலுங்கு, கன்னடம் போன்ற இன்னபிற பாஷைகள் கலந்து கட்டிய கூட்டாஞ்சோறுதான் சென்னைத் தமிழ் என்பது புரிந்தது.
இதுவரை சென்னைத் தமிழின் உச்சரிப்புத் திரிபுகளையும், அதன் கொச்சை வழக்கையும் மட்டுமே ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். தமிழகத்தின் இதர பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் வட்டார வழக்குகளுக்கு இருக்கும் மரியாதை சென்னைத் தமிழுக்கு இல்லை என்று கட்டுரையாளர் சுட்டிக் காட்டிய உண்மை வேதனையான ஒன்று.
சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் படிப்பறிவற்றவர்கள் மட்டும்தான் என்பது போன்ற மாயையை உருவாக்குவதில் தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதனாலும் இந்த பாஷை மற்ற வட்டாரங்களில் மரியாதை இழந்து போயிருக்கும். இதர வட்டார வழக்குகளைப் போன்று சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்கு என்ற மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். இந்த எண்ணத்தை உருவாக்கிய கட்டுரையாளருக்கு வாசகர்கள் சார்பில் ‘பெர்சா ஒரு சலாம் வக்கிறோம் நைனா’.
- தேஜஸ், காளப்பட்டி.