

சென்னையில் மிக அதிக வருடங்கள் வாழ்ந்து, இறுதியில் மதுரையில் அடைக்கலமாகிவிட்ட எனக்குப் பல கடற்கரைகளைப் பார்த்து மட்டும்தான் பழக்கம். ஏரி மாதிரி தெரிந்த ஜுஹூ பீச், ஆக்ரோஷமான திருச்செந்தூர் கடற்கரை, மயான அமைதியான கோவளம் கடற்கரை, வறண்ட காற்றடித்த தூத்துக்குடி, அழகிய, ஆனால் அரித்துப்போன மாமல்லபுரக் கடற்கரை, அப்பாவின் கைபிடித்து ஆட்டம்போட்டதில் தொடங்கி, 1998-ல் நள்ளிரவில் மாங்காய்ப் பத்தை வண்டிக்காரரிடம், சென்னையை விட்டு நாளை காலையில் கிளம்பிவிடுவோம். இனிமேல், நாங்கள் எப்போதாவதுதான் வருவோம் என்று சொல்லித் திரும்பியபோது அமைதியாக நான் பார்த்த, என் மறக்க முடியாத சிநேகிதியான மெரினா பீச்… இப்படி என் வாழ்வில் இவ்வளவுதான் கடல் என்று நினைத்தேன்.
அந்தக் கடலையும் கடல்சார் மக்களையும் மீன் இனங்களையும் உயிராக நேசிக்க வைத்துவிட்டீர்கள் என்னை. உங்கள் எழுத்துகளில் அவர்களின் வலி தெரிகிறது. இந்த வயதில், கடலுக்குள் போய் ஓங்கல்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ண வைக்கிறது.
ஒரு ட்வீட் என்னில் அலைமோதிக்கொண்டே இருக்கிறது:
‘டெல்லி மரணம் உலகம்வரை போய்விட்டது.
தமிழக மீனவர் மரணம் டெல்லிவரை கூட போக முடியவில்லை.’
இந்தத் தொடரில் இன்னும் பல அத்தியாயங்கள் வர வேண்டும்; பல்லாயிரக் கணக்கானோர் படிக்கக் காத்திருக்கிறோம்.
- வி.சாந்தா, மதுரை.