

இரான், அமெரிக்கா இடையேயான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்வதற்கான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்கிற உலகளாவிய எதிர்பார்ப்பு, இதனால் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
பிப்ரவரி 28இல் இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கின; அன்றிலிருந்து ஏப்ரல் 9இல் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது வரையிலான காலக்கட்டத்தில், பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் உட்பட உலகப் பொருளாதாரச் சூழலே பெருந்தாக்கத்துக்கு உள்ளானது.
மத்தியக் கிழக்கில் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. முதல்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், சமரச முயற்சிகள் தொடர்வது நம்பிக்கை அளிக்கிறது.
கத்தார், எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்தச் சில நாள்களாக முயன்று வருகின்றன. இந்த நிலையில், ‘அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் இரான் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்கிற தொனியில் கடந்த வாரம் கருத்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவரது பேச்சு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளைப் பின்னுக்கு இழுப்பதாகக் கருத்துகள் எழுந்தன