

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்துவருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்பதால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை இயன்றவரை தவிர்க்க, அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் முக்கியமான இடம்பிடிக்கின்றன. 2006இல் சட்டமன்றத் தேர்தலில், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, சமையல் எரிவாயு அடுப்பு, ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் போன்ற வாக்குறுதிகளை அறிவித்து திமுக வெற்றி பெற்றது.
2011 தேர்தலில், இலவச மாவரைக்கும் இயந்திரம், ஆடு மாடு, ஏழைப் பெண்களின் திருமணத்துக்குத் தாலி போன்ற அறிவிப்புகளுடன் களம் இறங்கி வென்றது அதிமுக. இத்தகைய வாக்குறுதிகள் அடித்தட்டு மக்களுக்குக் கைகொடுப்பதாக இருப்பினும், எந்த அளவுக்கு நிலைத்த தன்மையுடன் இருக்கின்றன என்கிற கேள்வியும் முக்கியமானது.