

நீர்நிலைகளைத் தவறாமல் ஆய்வு செய்யும்படி நீர்வளத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. நீராதாரங்களைப் பேணுவதில் அரசுக்கும் மக்களுக்கும் இருக்கும் கூட்டுப்பொறுப்பை வலியுறுத்துகிற இந்த உத்தரவு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
மதுரை மாவட்டம் சின்னகுறவக்குடியில் உள்ள பொதுக் கண்மாயில் இறைச்சிக் கழிவைக் கொட்டி மீன் வளர்க்கப்படுவதாகவும், குடிநீருக்கும் வேளாண்மைக்கும் தேவையான நீராதாரம் மாசுபடுத்தப்படுவதாகவும் எம்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கண்மாயில் மாசுபாட்டை அகற்றும்படியும் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் நீர்வளத் துறைக்கு உத்தரவிட்டது.
அரசுத் துறைகள் சில சந்தர்ப்பங்களில் பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கின்றன என்பதற்கு இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகியுள்ளது. மாசுபடுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை எனத் தொடக்கத்தில் நீர்வளத் துறை மறுத்தது.