

காட்டுயிர் சரணாலயங்களில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஞெகிழி உள்ளிட்ட கழிவுகள் காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதால் மண்வளம், நீர்வளம் பாழ்படுவதோடு, அப்பரப்பில் உயிரினங்களின் வாழ்வும் அபாயத்துக்கு உள்ளாகிறது.
இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், கடலோரச் சூழல் அமைப்புகளில் திடக்கழிவு கொட்டப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வாரம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, இது தொடர்பாகத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது; மேலும், ஜூலை 17இல் வனத் துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படுவதாக உத்தரவிட்டது. காட்டுயிர் ஆர்வலர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் உத்தரவு இது.