

மேற்கு ஆசியப் போர் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதாக உலகமே அச்சத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், நல்வாய்ப்பாக ஈரானுடன் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது ஆசுவாசம் அளிக்கிறது. அதேவேளையில், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதல்களால் அந்த நிம்மதி குலைந்துவிடுமோ என்கிற அச்சமும் எழுந்திருக்கிறது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பிப்ரவரி 28இல் அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போர் தொடுத்தன. உச்சத் தலைவர் கோமேனி உள்ளிட்ட பல தலைவர்களையும் தளபதிகளையும் இழந்துவிட்ட நிலையிலும், இஸ்ரேல் மீது ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தியது.
கூடவே, அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல் என்னும் பெயரில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலாகவும் அது அமைந்தது யாரும் எதிர்பாராதது. தவிர, எண்ணெய்க் கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடியது, அதைக் கடந்துசெல்ல கட்டணம் விதித்தது என ஈரான் மேற்கொண்ட உத்திகள் பல நாடுகளைப் பாதித்திருக்கின்றன.
ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரான் நாகரிகம் அழிக்கப்படும் என்று ஏப்ரல் 7இல் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், காலக்கெடு முடிவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர், ஏப்ரல் 8இல் இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.