

சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரம் நீர்த்துப்போகாமல் அனைத்துத் தரப்பினரும் சட்ட வரம்புக்குள் செயல்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரை செய்தார். இதை எதிர்த்து ஆளுநருக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்று ஏப்ரல் 8இல் தீர்ப்பளித்தது.