

பணப் பரிவர்த்தனைச் செயலியான யுபிஐ (UPI) இந்தியாவில் செயல்படத் தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த முன்னோடித் திட்டம் சாமானியர்கள் தொடங்கிப் பெருநிறுவனங்கள் வரை அனைத்துத் தளங்களிலும் காகிதமில்லாப் பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாகச் செயல்பட்டுவருவதுடன், உலகின் மிகப் பெரிய நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைத் தளமாகவும் இருக்கிறது. இந்தத் தருணத்தில், இதன் நிறை குறைகளை மதிப்பிடுவது அவசியம்.
தனிநபர் பணப் பரிமாற்றத்தை வேறு சேவைகளின் உதவி இல்லாமல் எண்ணிலக்கமயமாக்கும் (digitalization) நோக்கில், 2016 ஏப்ரலில் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் இந்திய தேசியப் பணப் பரிவர்த்தனைக் கழகத்தால் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பை 2016 டிசம்பர் 8இல் பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து இதன் பயன்பாடு அதிகரித்தது. தொடக்கத்தில் தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைக்கு உதவிய இதன் செயல்திட்டம் பிறகு ‘க்யூஆர் கோடு’ மூலம் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2023 – 2026இல் யுபிஐ உடன் ‘ருபே’ (RuPay) இணைக்கப்பட்ட பிறகு, அது உலகளாவிய விரிவாக்கம் கண்டது.