

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தினரிடையே (16-18 வயதுடையோர்) சம்மதத்துடன் நடைபெறும் உறவு தொடர்பான வழக்குகளில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருப்பது தீவிர கவனத்துக்கு உரியது.
போக்சோ சட்டத்தின் கடுமையான விதிகள், சட்டத்தை உருவாக்கியவர்கள் கற்பனை செய்ய முடியாத சில சூழ்நிலைகளில் பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவது தங்கள் கவனத்துக்கு அடிக்கடி வருவதாக நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு சில ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின்போது அண்மையில் தெரிவித்தது.