

கோப்புப் படம்
கர்நாடக மாநிலக் காட்டுப்பகுதியில் மூன்று தமிழர்கள், அம்மாநில வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம்.
தமிழக எல்லை அருகே உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹானூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை வேளையில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகியோர் கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒருவர் பலத்த காயமடைந்தார். ‘காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படியான வேட்டைக்காரர்களை எதிர்கொண்டபோது, அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; அதற்குப் பதிலடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உயிரிழந்தவர்களிடம் 34.5 கிலோ வனவிலங்கு இறைச்சி கைப்பற்றப்பட்டது’ எனக் கர்நாடக வனத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், காணாமல்போன கால்நடைகளைத் தேடி வனப்பகுதிக்குள் மூவரும் சென்றதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக வனத் துறையை எதிர்த்து ஹானூர் பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை ஏற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு நீதி விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.