

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் பெரும்பகுதி வசூலிக்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சூழலில், அபராதத் தொகையை வசூலிக்க அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது.
பெரும்பாலான சாலை விபத்துகளுக்குப் போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக அமைகின்றன. 2025இல், இந்தியாவில் ஒரு நாளுக்கு 502 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்டுவந்த அபராதத் தொகையைக் கணிசமான அளவு உயர்த்த மோட்டார் வாகனச் சட்டம் 2019 இயற்றப்பட்டது. சாலை பாதுகாப்புக் கட்டமைப்பைப் பராமரிக்க மாநில அரசுக்கு அபராதத் தொகை பயன்படுகிறது.
தண்டனைகள் முன்பைவிடக் கடுமையாக்கப்பட்ட பிறகும், விதிமீறல்களும் விபத்துகளும் அதிக எண்ணிக்கையில் நிகழ்கின்றன. அபராதத்தை இணையவழியிலும் செலுத்த முடிகிற அளவுக்கு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டாலும் அபராதம் செலுத்துவோர் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இந்திய அளவில் வசூலிக்கப்பட வேண்டிய ரூ.49,194.05 கோடியில் ரூ.26,175.05 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைத் தளர்வுகள் இன்றி நடைமுறைப்படுத்தக் கோரிக்கைவிடுத்து ராஜசேகரன் என்கிற மருத்துவர், 2012இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர், பெருமளவு அபராதம் வசூலிக்கப்படாமல் நிலுவையிலேயே இருப்பது குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அபராதம் வசூலிக்கப்படுவதை உறுதிப்படுத்தாமல், ஆயிரம் ‘சலான்’கள் அனுப்புவதால் என்ன பயன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.