

இந்தியாவில் ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பிலான 574 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் காலக்கெடு முடிவடைந்த பிறகும் நிறைவுசெய்யப்படாமல் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் சாலைக் கட்டுமானத்தில் ஏற்படும் சுணக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் - அமைப்புப் பணிகளில் 300 நெடுஞ்சாலைகள், நிர்ணயிக்கப்பட்ட தேதியைக் கடந்து ஓராண்டாகியும் முடிக்கப்படவில்லை.
253 நெடுஞ்சாலைகள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையும், 21 நெடுஞ்சாலைகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலும் தாமதப்பட்டிருக்கின்றன. இவை தவிர, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 133 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும் தொடக்க நிலையைக்கூட அவை எட்டவில்லை.