காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது, காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகத்துக்கு 2018இல் அனுமதி அளித்தது.
இதற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகியது. இந்த வழக்கில்தான் மேகேதாட்டு அணைத் திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அறிக்கையின் மீது மத்திய நீர்வள ஆணையம் ஏதேனும் முடிவை எடுத்துள்ளதா என்கிற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது.