2016 சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும், திமுகவின் அப்பாவு வெற்றி பெற்றதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்திருக்கும் தீர்ப்பு, தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்கு விசாரணை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
2016 மே 16இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 19 அன்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், குறிப்பிட்ட தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் மின்னணு வாக்கு எண்ணிக்கைச் சுற்றுகள் 19, 20, 21இன்போது முறைகேடு நடைபெற்றதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின்போது, 203 தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சான்றளித்தது செல்லாது என இன்பதுரை தரப்பு வாதிட்டது. 2019 அக்டோபர் 1இல் நடைபெற்ற விசாரணையின்போது, தலைமையாசிரியர்கள் தபால் வாக்குகளில் சான்றொப்பம் அளிக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியின் தபால் வாக்குகளையும் 19, 20, 21 சுற்று மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அக்டோபர் 4இல் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.