

பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மையான காரணங்கள் இருக்கும்பட்சத்தில் எழுத்துபூர்வ ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்குகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும்படி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணையின்போது தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய இருவர் அமர்வு, அனைத்து நீதிமன்றங்களுக்கும் இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பும்படி பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.