

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பருகும் குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதுபோன்ற மனிதத்தன்மையற்ற இழிசெயல்கள் இனி தொடராத வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணம் இது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டியில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பள்ளியின் குடிநீரில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, குடிநீர்த் தொட்டியை ஆசிரியர்கள் சோதனையிட்டனர்.
ஒரு ஞெகிழிப் பையில் மனிதக்கழிவு கிடந்ததும், பையின் மீது சிவப்பு மையால் துண்டுச்சீட்டில் ‘எச்சரிக்கை’ என்று தொடங்குகிற வாசகம் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பள்ளி கட்டப்பட்ட நிலத்தில் குடியிருந்தவர்கள் இதைச் செய்தார்களா என்கிற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் விநியோகத் தொட்டிக்குள் 2022ஆம் ஆண்டு மலம் கலக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நடைபெற்றது.