

திடக்கழிவை நான்கு வகையாகத் தரம்பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அண்மையில் அறிவித்திருப்பது, திடக்கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாகக் கவனம் ஈர்க்கிறது.
திடக்கழிவு உருவாகும் இடத்திலேயே, அவற்றை மட்கும், மட்காத, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் எனத் தரம்பிரித்து அகற்ற வேண்டும் என்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுங்காலமாக வலியுறுத்திவருகின்றனர். சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக்கிடங்குகளால் அப்பகுதிகளைச் சுற்றிச் சில கிலோமீட்டர் தூரம்வரை சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் பெருகிவருவது அறிந்ததே.
அங்கு வசிக்கும் மக்களின் மனக்குமுறலுக்கு மருந்தாக, கடந்த ஜூலை 12 அன்று திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026இன்கீழ் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றைத் தரம்பிரித்து, தூய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 கடந்த ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. கழிவுகள் தரம் பிரித்தலை மேம்படுத்துவதற்காகவும் கழிவு மேலாண்மை குறித்த பொறுப்புடைமையை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காகவும் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை நோக்க வேண்டியிருக்கிறது.