

தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட - காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்கிற மதுரை நீதிமன்றத் தீர்ப்பு ஆசுவாசம் அளிக்கிறது. காவல் நிலையச் சித்திரவதைகள், மரணங்களுக்கு இந்த வழக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்னும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
ஜெயராஜும் (58), அவரது மகன் பென்னிக்ஸும் (31) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அலைபேசிக் கடை நடத்திவந்தனர். கரோனா பொதுமுடக்க நேர விதிமுறைகளுக்கு மாறாகக் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி, 19.6.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ஜெயராஜை அழைத்துச் சென்று அவரைத் தாக்கினர்.
விஷயத்தைக் கேள்விப்பட்டுக் காவல் நிலையத்துக்குச் சென்ற மகன் பென்னிக்ஸும் கடுமையாகத் தாக்கப்பட்டார். மறுநாள் நீதிமன்றக் காவலின்கீழ் கோவில்பட்டிக் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இதுகுறித்து தானே முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது. ஒரு வாரத்தில் தமிழக அரசு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.