

25 பேரின் உயிர்களைப் பறித்த சிவகாசி கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள், சிறிதும் பெரிதுமாகப் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்வது கவலை அளிக்கிறது. பட்டாசு தயாரிப்பில் நிகழும் விதிமீறல்களுக்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய அவசியமும் எழுந்திருக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90% சிவகாசி பகுதியின் பங்களிப்புதான். ஏறக்குறைய ரூ.6,000 கோடி மதிப்பில் பட்டாசுத் தொழில் இங்கு நடைபெறுகிறது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
எனினும், அடிக்கடி நிகழும் வெடிவிபத்துகளும் அவற்றில் சிக்கிப் பல தொழிலாளர்கள் இறப்பதும் இந்தச் சாதனைகளுக்கு அளிக்கப்படும் விலையா என்கிற கேள்வி எழுகிறது. உரிமம் பெற்ற ஆலைகளாக இருப்பினும், அவற்றில் விதிமுறைகள் மீறப்படுவது விபத்துகளுக்கு முதன்மைக் காரணம்.
கட்டனார்பட்டியில் ஏப்ரல் 19 அன்று வெடிவிபத்து ஏற்பட்டு 25 பேர் உயிரிழக்கக் காரணமான ஆலை உரிமம் பெற்றதுதான். தொழிலாளர்கள் பட்டாசுக்கான மூலப்பொருள்களைக் கையாண்டுகொண்டிருந்த அறைக்குள் வரையறுக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்ததால் உராய்வும் வெப்பமும் உருவாகி வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஒவ்வோர் அறையும் எவ்வளவு பரப்பில் இருக்க வேண்டும்; மூலப்பொருள்கள் எப்படி, எவ்வளவு இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட மற்ற விதிமுறைகளும் மீறப்படுவது உண்டு.