

அண்மையில் நடந்த நீட் மருத்துவ (இளநிலை) நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தை இவ்விவகாரம் உருவாக்கி இருக்கிறது.
நாடு முழுவதும் மே 3 அன்று நடந்த நீட் தேர்வில் ஏறக்குறைய 22.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே, ராஜஸ்தானின் சீகர் மாவட்டத்தில் வினாத்தாள் கசிந்ததாகச் செய்திகள் வெளியாகின.
முதலில் இத்தகவலை மறுத்த என்டிஏ, தேர்வை ரத்துசெய்வதாக மே 12 அன்று தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது மத்திய அரசு. இதுவரை 5 பேர் கைதாகியிருக்கின்றனர்.
ஏற்கெனவே, 2024இல் இதே போன்று வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையானது. அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட கே.ராதாகிருஷ்ணன் குழு 101 பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. என்டிஏ மறுசீரமைப்பு, பல கட்ட நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
ராஜஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள வினாத்தாள் கசிவு விவகாரம், அந்தப் பரிந்துரைகள் எந்த அளவுக்குச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்னும் கேள்வியை எழுப்புகிறது. தூக்கம், ஓய்வு, கேளிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, பல மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சியெடுத்து வருகின்றனர்.