

அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்துக்காக நிலங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி தமிழ்நாடு அரசால் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் ‘இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்’ என்னும் மணல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் மூலம் சின்னவிளை, பெரியவிளை கடற்கரைக் கிராமங்களில் உள்ள மணலில் நிறைந்திருக்கும் மோனோசைட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், கார்னெட், சிலிமனைட் போன்ற அணுசக்தித் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கூடவே, மணவாளக்குறிச்சியின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு 2015இல் முடிவெடுத்தது.
கிள்ளியூரில் இருந்து கொல்லங்கோடு வரை உள்ள கடற்கரைக் கிராமங்களில் 1,144 ஹெக்டேர் நிலப்பரப்பை இதற்குப் பயன்படுத்த 2020இல் அதிமுக அரசு ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையை 2021இல் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.