

விசாரணைக்கு அழைக்கும் நபர்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான முக்கிய முன்னெடுப்பு.
காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் தாக்கப்படுவது தொடர்பான பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல் துறை விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட வேண்டும்; அதில் எந்தத் தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும்; விசாரணை நடவடிக்கைகளைக் காவல் நிலையக் குறிப்பேட்டில் பதிவுசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.
இறுதியாக, விசாரணைக்கு அழைக்கப்படுபவரைக் காவல் துறையினர் துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தது.
சித்திரவதை தடுக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்பு மிக உறுதியாகத் தெரிவிக்கிறது.
முறையான சட்ட நடைமுறையைத் தவிர, எந்தவொரு நபரின் வாழ்வுரிமையோ, தனிப்பட்ட சுதந்திரமோ பறிக்கப்படக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டக்கூறு 21.