

இந்திய எண்ணெய்க் கழகத்தின் (Indian Oil Corporation) ஆலையில், பாலினப் பாகுபாட்டினால் வேலை மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ஹரியாணா பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
இது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும் தீர்ப்பு என்பது கவனிக்கத்தக்கது. ஹரியாணா மாநிலம் கர்னால் நகரத்தில் இந்திய எண்ணெய்க் கழகத்தின் ஆலை உள்ளது. இங்கு ரூ.34 நாள்கூலிக்கு எல்பிஜி உருளைகளில் எரிவாயு நிரப்பும் பணிக்கான நியமனம் 1989இல் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருந்த சுமித்ரா, தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பேரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். நேர்முகத் தேர்வில் அவருக்கு நியமன ஆணை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு பணி வழங்கப்படவில்லை.
உரிய தகுதி, திறமை இருந்தபோதிலும் தனக்குப் பணி மறுக்கப்பட்டதை எதிர்த்து கர்னால் கீழமை நீதிமன்றத்தில் சுமித்ரா 1990இல் வழக்குத் தொடுத்தார். விசாரணையில், ஆண் ஊழியர்களுடன் சேர்ந்து இரவு பகல் பாராமல் வேலைசெய்ய வேண்டியிருக்கும் என்பதால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டது தெரியவந்தது.