

இந்தியாவில் 2019-20இல் 10.32 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25இல் 10.13 லட்சமாகக் குறைந்திருக்கிறது. ஒரு மாணவர்கூட இன்றி 5,159 பள்ளிகள் வெறிச்சோடிக் கிடப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியாவில் தற்போது 14.71 லட்சம் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 4.58 லட்சம் தனியார் பள்ளிகள். ஒட்டுமொத்தமாக 24.69 கோடி மாணவர்கள், 1.01 கோடி ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்களில் 12.16 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், மீதம் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர். இதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய அளவில் 19,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 8% அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவரில்லாப் பள்ளிகளில் 70% பள்ளிகள் தெலங்கானா (2,081), மேற்கு வங்கம் (1,571) ஆகிய இரு மாநிலங்களில் உள்ளன.
மொத்தம் உள்ள அரசுப் பள்ளிகளில் 65,054 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த இரண்டே ஆண்டுகளில் சொற்ப மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 24%ஆக உயர்ந்துள்ளது. இப்படி 10க்கும் குறைவான அல்லது மாணவர் அற்ற பள்ளிகளில் 1.44 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.