

குழந்தைகளுக்கு எதிரான கொடூரப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர்.வீரமணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன.
இந்தக் குற்றங்களில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி - மகேந்திர சிம்மன் இணையரும், வீரமணியின் உதவியாளர் கணேசனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைப் போலவே வீரமணி வழக்கும் பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம், ஒரு சிறுமியை வீரமணி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் காணொளி ஆதாரத்தைக் குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவர் காவல் துறையினருக்கு அனுப்பிவைத்தார்.
இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. எனினும், அந்தக் காணொளியில் இருப்பவரை அடையாளம் காண முடியவில்லை எனவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வயதை உறுதிப்படுத்த இயலவில்லை எனவும் காவல் துறை இந்த வழக்கை மூடப்பார்த்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா அதை ஏற்க மறுத்து, விசாரணையைத் தொடரும்படி உத்தரவிட்டார்.
அதன் பிறகே இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்து, வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறுமி அடையாளம் காணப்பட்டு அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அச்சிறுமி பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.