

உலகம் பற்பல கனவுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. தனிநபர், குடும்பம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் அமைதியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இந்த ஆண்டில் தழைக்கும் என்கிற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்.
ஓர் ஆண்டு தொடங்குவதை ஒரு குழந்தையின் பிறப்புபோலக் கருதி மகிழும் மனநிலை, உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. ஜனவரி 1ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்ட கிரிகோரியன் நாள்காட்டி பிரிட்டனிலும் இந்தியா உள்ளிட்ட அதன் காலனி நாடுகளிலும் 1752இல் நடைமுறைக்கு வந்தது. அன்றைக்கு அரசரையோ, ஆளுநர்களையோ அரசாங்க ஊழியர்களும் மக்களும் சந்தித்து வாழ்த்து பெறுகிற வழக்கம் பின்னாள்களில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டமாக உருவெடுத்தது. தமிழ்ப் புத்தாண்டு, யுகாதி, விஷு என நம் நாட்டில் மரபான ஆண்டுத் தொடக்கங்கள் இருப்பினும், ஆங்கிலப் புத்தாண்டு உலகில் அடிப்படை ஆகிவிட்டது.