

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் மோடியைச் சந்தித்தது, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்திருக்கும் சூழலில், இந்தச் சந்திப்பு பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
2022இல் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய பிறகு இந்தியாவுக்கு புதின் வருவது இதுவே முதல் முறை. 2023இல் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றபோதுகூட அதில் புதின் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தற்போது பிரதமர் மோடியுடனான புதினின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களுக்கு 50% வரிவிதித்து (தற்போது உள்ளதைவிடக் கூடுதலாக 25%) உத்தரவிட்டார்.