

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏறக்குறைய 4 ஏக்கர் பகுதியில் செயல்பட்டுவரும் தமிழகச் சட்டமன்றம், தலைமைச் செயலகம், இதர அமைச்சகங்களின் அலுவலகங்கள் இட நெருக்கடியால் விரிவாக்க, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டுவருகின்றன. கோட்டையின் பெரும்பகுதி பாதுகாப்புத் துறை, தொல்லியல் துறை வசம் இருப்பதால், அதற்கான ஒப்புதல் பெற இயலாத நிலை உள்ளது.
2001 – 2006 அதிமுக ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டன. அதற்கடுத்து, கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்திலும் சட்டப்பேரவை அமைக்கத் திட்டமிடப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம், சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது;
ஆனால், 2011இல் பொறுப்பேற்ற அரசு, அங்கு மருத்துவமனை செயல்படும் என்று அறிவித்தது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம் உள்ளிட்ட சில இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவை எதுவும் செயல்வடிவம் பெறவில்லை.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடியில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள கடற்கரையை முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும் மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்திவருகின்றனர்.