

தமிழ்நாட்டில் 23,640 மையங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட எழுத்தறிவு, எண்ணறிவுத் தேர்வில் 4.45 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனையடுத்து தமிழ்நாடு 100% எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில், முறையான பள்ளிப் படிப்பைத் தவறவிட்ட 15 வயது முதல் 35 வயது வரையிலான மக்களுக்கு எழுத்தறிவு ஊட்டும் தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகிறது.
இதில் எழுத்தறிவு, எண்ணறிவோடு, அன்றாட வாழ்க்கைக் கணக்குகள், திறன்பேசிப் பயன்பாடு, வங்கிப் படிவங்களை நிரப்புதல் முதலானவற்றையும் சேர்த்து 15 வயதுக்கு மேற்பட்ட பாமர மக்களுக்குக் கற்பிக்கும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-23இல் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு உள்பட்ட பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநில அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம் மூலம் மத்திய அரசுடன் இணைந்து எழுத்தறிவு பெறாதவர்களுக்குக் கல்வி கற்பித்துவருகிறது.