

மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பலனளிக்கும் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படலாம் என்கிற குரல்களும் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பான விரிவான விவாதங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்பு இருந்த 29 சட்டங்களுக்கு மாற்றாக, தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில் துறைத் தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய நான்கு சட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாகின. 2025 நவம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்கல், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடல்நலப் பரிசோதனை, உணவகம், கழிப்பறை, முதலுதவி மையம், குழந்தைகள் காப்பகம், முறைசாராத் தொழில் துறைப் பணியாளர்கள் - கிக் (gig) தொழில் துறைப் பணியாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றைப் புதிய சட்டங்கள் உறுதிசெய்கின்றன. பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் கவனம் ஈர்க்கின்றன.
தொழில் துறைக்கு - குறிப்பாக உற்பத்தித் துறை, சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தச் சட்டங்கள் மிகவும் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்களை வேலைநீக்கம் செய்வது தொடர்பான செய்திகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குகின்றனவா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
குறிப்பாக, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கூட்டுப்பேர உரிமை, வேலைநிறுத்த உரிமை போன்றவற்றை இழக்கச் செய்யும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. திருத்தச் சட்டத்தின்படி போனஸ் வழங்குவதற்கான காலக்கெடு ஆறு மாதத்திலிருந்து எட்டு மாதம் வரையும் நீட்டிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
மொத்த ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம் (Basic pay) குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும் என்கிற விதிமுறையால் நடுத்தர வருமானம் கொண்டிருக்கும் ஊழியர்களுக்குக் கையில் கிடைக்கும் சம்பளம் குறையலாம் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. வருங்கால வைப்பு நிதி, நீண்டகாலச் சேமிப்பு என்கிற அம்சங்களின் அடிப்படையில் இது தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்; எனினும், கையிருப்பில் பணம் குறைவதால் வாங்கும் சக்தி குறையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேவேளையில், அண்மையில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு அதிக அளவில் இருக்காது என்றும் நம்பப்படுகிறது.
தொழிலாளர்கள் தொடர்பாக, மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளை உருவாக்கும் உரிமை பெற்றவை என்றாலும், அந்த விதிகள் தொழிலாளர் சட்டங்களுடன் ஒத்துப்போக வேண்டும்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதிய சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. இவ்விஷயத்தில் தொழில் துறை நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புகள், மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பினரும் சாதகமான முடிவை எட்டும் வகையிலான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.