

மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை கோயம்பேட்டில் 18 வயது இளம்பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளம் பெண்ணும் உயிரிழந்துவிட்டார்.
மது உள்ளிட்ட போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் இனியும் மெத்தனம் கூடாது என்பதைத்தான் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன. விழுப்புரம் மாவட்டம் அனிச்சம்குப்பத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவந்த யான்சி (18), தன் தோழியின் மூலம் அறிமுகமான 17 வயதுத் தோழியைச் சந்திக்க சென்னை வந்தார்.
மே 30 இரவு, இருவரும் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நடனமாடியபோது, ஆறு இளைஞர்கள் அடங்கிய ஒரு கும்பலோடு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அது மோதலாக மாறவே, இரண்டு தரப்பையும் விடுதி நிர்வாகம் வெளியேற்றியது.
அதன்பிறகு, தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சியின் மீது அந்த இளைஞர்கள் காரை ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றனர். அந்தக் கொடூர நிகழ்வில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருடைய தோழி ஜூன் 3 அதிகாலை உயிரிழந்தார்.