

அண்மையில் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் படுதோல்வி, அக்கட்சி தனது செயல்பாட்டைச் சுயவிமர்சனத்துக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
தற்போது ஆறு மாநிலங்கள் மட்டும் சட்டமன்றத்தோடு மேலவையையும் கொண்டுள்ளன. மேலவையில் மூன்றில் ஒரு பங்கு பேரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆகியோர் வாக்கு அளித்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தச் சூழலில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய நான்கு மாநிலங்களில் மொத்தம் 28 தொகுதிகளுக்கு அக்டோபர் 23 அன்று மேலவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் 16 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி ஐந்து இடங்களிலும்; தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) இரண்டு இடங்களிலும்; காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஆகியவை தலா ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பிஹாரில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.