

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் மீது அளிக்கப்பட்ட திருட்டுப் புகாரில் உண்மை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை ஒட்டுமொத்தமாகப் புதிய பார்வையில் அணுக வேண்டிய தேவையையும் உண்மையான நீதியைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தையும் இந்தத் தகவல் உருவாக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் மீது, தனது நகைகளைத் திருடியதாகப் பேராசிரியை நிகிதா புகார் அளித்தார். இதன்பேரில் கடந்த ஆண்டு ஜுன் 28 அன்று தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இவ்வழக்கில், காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்தது. அண்மையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைப் பிணையில் விடுவிப்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடந்தபோது, அஜித்குமார் மீதான திருட்டுப் புகாரில் உண்மை இல்லை என்றும் இது காவல் மரணம்தான் என்றும் சிபிஐ தரப்பு தெரிவித்தது.